Sunday, September 20, 2015

இயக்குனர் திரு. ராஜேஷ் அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

நவீன சமுதாய கட்டமைப்பில், பெண்களுக்கான சுயமரியாதை வளர்ந்து வரும் வேளையில்,  சமுதாய சீர்திருத்தத்திற்கான வித்துகள் விருட்சமாகி வரும் வேளையில், மது போதை   தீங்கிற்கான போராட்டங்கள் விஸ்வரூபம் அடைந்தது வரும் வேளையில்,  இதை பற்றியெல்லாம் துளியும் அக்கறையின்றி, மிகவும் துணிச்சலாய்  நமது  கலாச்சாரகட்டமைப்பின் மீதே போர் தொடுக்கும் வகையில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சமீபத்தில் திரையில் வெளிவந்து வெற்றிகரமாய் (?) ஓடிக்  கொண்டிருக்கும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க (வி.எஸ்.ஓ.பி) எனும் திரைப்படம்.

படம் 1: வி.எஸ்.ஓ.பி

நான் ஓர் சாதாரணக் குடிமகன். மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில், இரை  தேடும் பறவையாய் எதிர் கால கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஓர் சாமானியன். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுவது தவறென்றும், வயதில் மூத்தவர்களை  மதித்து நடப்பது நமது கடமை என்றும் சொல்லி வளர்கப்  பட்டவன். சமூக அக்கறையுடன்  தமது கடமையைச் செய்ய வேண்டும் என எண்ணும் பலரில் ஒருவன். எங்களுக்கும் ரசனை உண்டு, நாங்கள் வாழும் சமுதாயத்தின் மேல் எங்களுக்கும் அக்கறை உண்டு. இளைஞர்களாகிய எங்களுக்கும் சமூக வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பங்குண்டு.

நவ நாகரிக உலகில், படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள அரும் பாடு பட்டு, வரும் சொற்ப வருமானத்திலும் தாய் தந்தையரின் துயரம் துடைக்க, சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை தக்க வைக்கும் பொருட்டு அயராது  இயங்கிக் கொண்டிருக்கும் எங்கள் இளைஞர் சமுதாயத்தை, வெறும் பெண் உடலைக் கண்டு மயங்கும் மதி கெட்ட கூட்டமாகவும், மது போதைகளுக்கு அடிமையான கொடிய மிருகங்களாகவும் சித்தரித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பொழுது போக்கு எனும் பெயரில் நாகரிகமற்ற செயல்களை ஊக்குவிப்பதும், தீங்கான பாதையில் எம் இளைஞர் சமுதாயத்தை திசை திருப்ப முயல்வதும்,  திரு. ராஜேஷ் போன்று வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு அழகல்ல.

ஒரு பெண்ணை தன் உடல் ரீதியாகவும், அவர் சார்ந்து இருக்கும் சமுதாய  அமைப்பின் ரீதியாகவும் கேலி செய்வது மிகவும் தவறு. கதையின்படி நாயகியாய் வருபவர் தமன்னா. அவரின் தோழியாய் நடித்திருப்பவர்  வித்யுலேகா.  உடல் சற்று பருமனாய் இருப்பதன் காரணத்தால், பெண்னென்று பாராமல் அவரை இரட்டை அர்த்த வசனங்களால் கலாய்பதும், ஆண் உடலைக் கண்டு அலையும் கேலிப்பொருளாகவும்  சித்தரித்திருப்பது மிகவும்  கீழ்த்தனமானச்  செயல்.  இது போன்ற காட்சிகளை மக்கள் ரசிப்பார்கள் என எண்ணுவதே தவறு. அடுத்தவர் மனதை நேரடியாய் புண்படுத்தும் வகையில் இது அமைந்து விடுகிறது.

படம் 3: வித்யுலேகா
இது போன்ற  காட்சிகளை   இயக்குனர்  தவிர்திருந்திருக்க வேண்டும். நகைச்சுவை எனும் பெயரில் இரட்டை அர்த்த வசங்கள் பேசுவதும், வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் ஏசுவதும் முறையா?  வளர்ந்து வரும் நம் சமூகத்தின் அஸ்த்திவாரத்தையே இது போன்ற திரைப்படங்கள் தகர்த்து விடாதா? 

பெண்கள் என்றால் மெலிந்த இடையுடனும், வெள்ளை வெளேரென தோற்றம் கொண்டும், சதா சர்வ காலமும் ஆண்களை சுற்றி சுற்றி வந்து காதல் செய்து காலத்தை கழிப்பவர்கள் எனும் கண்ணோட்டம் மாறவேண்டும். ஒல்லியாய், மெலிந்த தோற்றத்துடனும், உடல் பருமனாய் மாநிறத்திலும், கரு வண்ணத்திலும் இருக்கும் எம் பெண்கள் எல்லாம் பெண்களே இல்லையா? கரு நிற பெண்கள் எல்லாம் அழகில்லையா? அகத்தில் இருக்க வெண்டுமய்யா  அழகு.

ஊடகம் எனும் மாபெரும் ஆயுதத்தால் மக்களை சிறிதேனும் நல்வழிப் படுத்த முயலலாம். அதைச் செய்ய இயலவில்லை என்றால், சற்று ஒதுங்கியாவது நிற்கலாமே.

"வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே"


படம் 4: பட்டுக்கோட்டை அய்யா 

படங்கள்: நன்றி கூகுள்.


Saturday, July 11, 2015

அனைவருக்கும் விருந்து! அனுமதி இலவசம் !!

சென்னையில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில், "மாதுரி சாட்" என்ற பெயரில்  மிகவும் பிரலமான நார்த்-இந்தியன் சாட் வகைக் கடை ஒன்று உள்ளது. மிகவும் பிரபலமான கடை என்று நான் சொல்வதன் காரணம், அதில் தரப்படும் சாட்டின் ருசியும், புற்றீசல் போல் மக்கள் வெள்ளம் அங்கு கூடிக் குலாவுவதினாலும் தான். மெயின் ரோட்டிற்கு பின்னால், சற்று அமைதியாகவும், மறைவாகவும் இருப்பதால், இளசுகள் பலரின் ப்பேவரட் ஸ்பாட்டாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.  கொஞ்சம் கொஞ்சமாக, இது மாதிரியான சாட் வகைக் கடைகள் பெருகி வருவதை  நம்மால்  கண்கூடாக  காணவும் முடிகிறது. 

லாபம் பெரிது தான் என்றாலும், இதற்கான வரவேற்ப்பு SEASONAL தான். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மக்கள் இங்கு கூடுவர். பெரும்பாலும் மாலை நேரமாகவே இருக்கும். இவர்களுக்கு  விதிக்கப்பட்டிருக்கும் இப்பொன் நேரமானது,  மாலைப் பொழுது  மட்டுமே.

இதற்கு நேர்மாறானது,  நம்மூர் கடைகள்.  அகில உலகளவில், நம்மூர் கடைகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பை நாம் அறிவோம். விடியற்காலை தொடங்கி,  நள்ளிரவு முதல், அனைத்துக்  காட்சிகளும் ஹவுஸ்புல் தான். இங்கு 2 ரூபாய்க்கும் இட்லி கிடைக்கும், 200 ரூபாய்க்கும் இட்லி கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு வகை. எதை வாங்குவதற்கும் கணக்கு பார்க்கும் 'பட்ஜெட் மாதவன்கள்' கூட, சாப்பிடுவதற்கு கணக்கு பார்க்க மாட்டார்கள்.  

பணத்தை தண்ணியாய் செலவு செய்வதிலும், தண்ணிக்காக பணத்தை செலவு செய்வதிலும் நம்மூர் வாசிகளுக்கு ஈடு எவரும் இலர்.

இத்தகைய சிறப்பும், பாரம்பரியமும், ருசியும் நம்மூர் உணவு வகைகளுக்கு உண்டு. சற்று மிகையாக  'உண்டு' என்றே கூறலாம்.

எத்தனை வகைகள், இதில் தான்  எத்தனை வேறுபாடுகள். திண்டுக்கல் வகை சமையல், தஞ்சாவூர், செட்டிநாடு, சென்னை, மதுரை என பட்டியல் நீண்டு நம்மை பிரமிக்க வைக்கின்றன.  இதில், எனக்கு மிகவும்ம்ம்ம் பிடித்த உணவு வகைகளை கீழே இங்கு வரிசை படுத்தியுள்ளேன்.   இலவச விருந்து. கூச்சப்படாமல் ஒவ்வொன்றாய் ருசி பாருங்கள். பந்தி முடிந்ததும், மொய் வைப்பதும் வைக்காததும் உங்கள் விருப்பம். :-)  

1. புல் மீல்ஸ்:  இத அடிச்சுக்க உலகில் ஏதாவது உணவு வகை  உண்டானு சொல்லுங்க பாப்போம். வெயில்ல பேய் கணக்கா திரிஞ்சிட்டு, நல்ல பசியோட வீட்டுக்கு போயி அம்மாவின்  கையால்  உணவை பரிமாறி சாப்பிடும்  சுகம் இருக்கே. கோடி ரூபா கொடுத்தாலும், இதற்கு ஈடாகுமா? ம்ம். ஆகாது. 2. கேரட் பொறியல்: கேரட் அல்வா நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. நம்மில் பலர் கேரட்டை பச்சையாக அப்படியே  சாப்பிடுவோம்.. இன்னும் சிலர் கேரட் சாம்பார், கேரட் கூட்டுனு பிண்ணுவாங்க.. ஆனா, என்னோட 'பேவரட்' கேரட் பொறியல் தான். சின்ன  சின்னதா வெட்டி,  சூடா செஞ்சு வெச்ச கேரட் பொறியல் மேல, பச்சை பச்சையா பீன்ஸ் தூவி, கடுகு தாளிச்சு, சுடச் சுட இலையில் பரிமாரி சாப்பிட்டா.. ப்பா.. பூவுலகில் இருந்தபடியே சொர்க்க நிலையை அடைந்து விடலாம்.3. என்னோட 'பேவரட்' லிஸ்ட்டில் அடுத்து இருப்பது, பிஸிபேலாபாத் எனும் சாம்பார் சாதம். கொஞ்சம் சாம்பார் சாதம், அதனுடன் தொட்டுக்க மலர் போல் மலர்ந்திருக்கும் அப்பளம்.  

                      


4. பருப்பு பொடி சாதம்: நம்ப ஊரு கடைகள்ல பொதுவா இது கிடைக்குறது இல்ல.  ஆந்திரா மெஸ் கடைகளுக்கு போனா கண்டிப்பா கேட்டு வாங்கி சாப்பிட வேண்டிய ஐட்டம் இது. சூடான சாதத்து நடுவில் குழி வெட்டி பருப்பு பொடி கலந்து, நல்லெண்ணெய் ஊற்றி  சாப்பிட்டால் அமிர்த்தம் உண்டதற்கான பலன் கிட்டும்.                           

5. மிளகு பப்படம்: மேலே சொன்ன எல்லா உணவு வகைகளோடும் சமத்துவம் பாராட்டி,அனைத்து வகைகளுடனும் ஒத்துப்போகும் உயரிய குணம், இப் பப்படத்திற்க்கு மட்டுமே உண்டு. முக்கியமாக ரசம் சாதத்திற்கும், இதற்கும் இருக்கும் 'கெமிஸ்ட்ரியை' வர்ணிக்க, கலா 'மாஸ்டருக்கே' கொஞ்சம் கஷ்டம் தான்.  பப்படத்துடன் உணவு உள்ளே செல்லும் போது ஏற்படும் தேகசுகமே தனி. 'அப்படியே சாப்பிடலாம்'.

                          

6. பூண்டு ஊறுகாய்:  ஊறுகாய்களில் பல வகை இருந்தாலும், பூண்டு ஊறுகாய் தரும் ருசி அலாதி. உடம்பிற்கும் நல்லதாம். இதய கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒரு பூண்டை பச்சையாக மென்று  வந்தால் இதயத்திற்கும் நல்லதாம். நல்லா கேட்டுக்கோங்க மக்கா.

                            


7. தயிர் சாதம் - வத்தக் குழம்பு: 

அது ஏனோ தெரியவில்லை, பல பேருக்கு தயிர் சாதம் என்றாலே பிடிப்பதில்லை. பாவப்பட்டவர்கள். ஆனால் எனக்கு தயிர் சாதம் என்றால் உயிர். சரவண பவன் சென்றாலும் கூட தயிர் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட வேண்டும் என்றே தோன்றும். எங்களுக்குள் இருக்கும் காதல், கலப்படமற்றது. 

                   
                                      


8. ஜவ்வரிசி பாயாசம்: 

சிறு வயதிருந்தே எனக்கு பிடித்த பாயாச வகைகளுள் ஒன்று, ஜவ்வரிசி பாயாசம். கல்யாண வீடுகளில் கடைசியாக வைக்கப்படும் பாயாசத்தை சற்றும் கூச்சப்படாமல் தேவைக்கேற்ப்ப.. இல்லை இல்லை.. ஆசைக்கேற்ப்ப இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ வாங்கி ருசிக்கும் ருசியை.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..

                               


9. வெண்ணிலா ஐஸ் கிரீம்: கடைசியாக ஜில் ஜில் ஐஸ் கிரீம். சிறுசு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி ருசிப்பது ஐஸ் ஒன்று தான்.. 

"வயிர் புல், இனி சாப்பிட முடியாது" என்று 'உண்ட மயக்கத்தில்' இருப்பவர்கள் கூட, "ஐஸ்னா சாப்பிடலாம்" என்று சொல்லி கேட்டிருப்போம். அனைவரையும் வசியப்படுத்தும் ருசி இதற்கு மட்டுமே உள்ளது. கரண்டியை வைத்து வாயில் செலுத்தியவுடன் நாவில் நின்று கொண்டு நடனமாடும். பின் நழுவி தொண்டை வழியாக இதமாய்  உள்ளிறங்கும் சுகமே சுகம்.

                                        

விருந்திற்குவருகை தந்து,  'கை' நனைத்த அனைவருக்கும் நன்றி. :-) :-)